தனியார் மூலம் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது


தனியார் மூலம் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது
x
தினத்தந்தி 20 Feb 2021 8:35 PM IST (Updated: 20 Feb 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தனியார் மூலம் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது.

குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தபடி பயணம் செய்து மகிழ்கின்றனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மலைரெயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் டிசம்பர் மாத முதல் வாரத்தில் வாடகை அடிப்படையில் தனியார் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் மலைரெயில் தனியார்மயமாக்கப்பட்டதாகக்கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

அதன்பின்னர் வாடகை அடிப்படையில் தனியார் மூலம் மலைரெயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தொடந்து சாதாரண கட்டணத்துடன் வழக்கமாக மலைரெயில் இயக்கப்படுவது தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று தனியார் மூலம் வாடகை அடிப்படையில் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது. 

அந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மதியம் 2.10 மணிக்கு வந்தது. அதில் 8 பெண்கள் உள்பட 150 பயணிகள் வந்தனர். அவர்கள் குன்னூர் ரெயில் நிலையம், பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த மலைரெயில் தனியார் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டது ஆகும். இன்று(நேற்று) ஒருநாள் மட்டுமே வாடகைக்கு எடுத்தனர். 

மீண்டும் அவர்கள் பணம் கட்டினால், வாடகைக்கு மலைரெயில் விடப்படும். இது தவிர சாதாரண கட்டணத்துடன் வழக்கமாக நடைபெறும் மலைரெயில் சேவை தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.

Next Story