தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகள் சாகடிப்பு
செண்பகராமன்புதூர் அருகே தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளரை பழிவாங்க இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆரல்வாய்மொழி:
செண்பகராமன்புதூர் அருகே தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளரை பழிவாங்க இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளார்.
கோழிகள் செத்தன
நாகர்கோவில் அருகே காஞ்சிரங்கோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (28). உறவினர்களான இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் அருகே அவ்வையாரம்மன் கோவில் பின்புறத்தில் கால்வாய் கரையோரம் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் கொட்டகை அமைத்து சுமார் 12 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோழிகளுக்கு தீவனம் அளித்து விட்டு இருவரும் வீட்டிற்கு சென்றனர். கோழிப் பண்ணையில் பராமரிப்பாளர் முருகன் மட்டும் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு முருகன் கோழிகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது கோழிகள் சாரை, சாரையாக செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
விஷம் கலந்து சாகடிப்பு
உடனே இதுகுறித்து முருகன் கோழிப்பண்ணை உரிமையாளர்களான சுரேஷ், ராஜனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு மொத்தம் 6 ஆயிரம் கோழிகள் செத்து கிடந்தது தெரிய வந்தது.
கோழிகள் திடீரென செத்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் சுற்றி பார்த்தனர். அப்போது, கோழிப்பண்ணையில் தண்ணீர் தொட்டி அருகில் காலியான விஷ பாட்டில் ஒன்று கிடந்தது. உடனே தண்ணீர் தொட்டி மேல் ஏறிச் சென்று ஆய்வு செய்தபோது தண்ணீரில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் தொட்டியும் சேதப்படுத்தப் பட்டிருந்தது. அந்த விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் தான் 6 ஆயிரம் கோழிகள் இறந்தது தெரியவந்தது.
முன்விரோதத்தில் பயங்கரம்
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோத தகராறில் கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷை பழிவாங்க அவருக்கு சொந்தமான கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றது அம்பலமானது. அதாவது, பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் நகரை சேர்ந்த ஷாஜன் (32) என்பவர் கோழிகளை கொன்ற தகவல் வெளியானது.
ராஜனும், சுரேசும் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்துவதற்கு முன்பாக அங்கு ஷாஜன் கோழிப்பண்ணையை நடத்தி வந்துள்ளார்.
பரபரப்பு
அப்போது சில விஷயங்களில் சுரேஷ் இடைஞ்சலை ஏற்படுத்தியதாக ஷாஜன் நினைத்துள்ளார். பின்னர் ஷாஜன் தொழிலை கைவிட்ட பிறகு அதே இடத்தில் சுரேஷ் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இது ஷாஜனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு நிலவியதாக தெரிகிறது.
இதனை மனதில் வைத்துக் கொண்டு ஷாஜன், சம்பவத்தன்று இரவு கோழிப்பண்ணைக்குள் புகுந்து தண்ணீரில் விஷம் கலந்து கோழிகளை கொன்றதாக தெரிகிறது. அதே சமயத்தில் ஷாஜனும் தலைமறைவாகி விட்டார். மேலும் இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 ஆயிரம் கோழிகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story