கர்ப்பிணிகளுக்கு சத்தான காய்கறிகள்


கர்ப்பிணிகளுக்கு சத்தான காய்கறிகள்
x
தினத்தந்தி 20 Feb 2021 9:27 PM IST (Updated: 20 Feb 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிகளுக்கு சத்தான காய்கறிகள் வழங்கப்பட்டன

தொண்டி, 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து குறைவு மற்றும் ரத்தசோகையினால் தாய்வழி இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து கர்ப்பிணி தாய் மார்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஆரோக்கியம் கருதியும் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலேயே அனைத்து வகை கீரைகள், கறிவேப்பிலை, தக்காளி, வெண்டைக்காய் ஆகியவற்றை உன்னும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகங்களில் சத்தான காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்பட்டு காய்கறி தோட்டம் அமைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கினர். அதன் அடிப்படையில் திருவாடானை யூனியனில் 100 பள்ளி வளாகங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்கபட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சங்குடி ஊராட்சியில் கடம்பாகுடி பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கடம்பாகுடி கணேசன் முழு முயற்சியால் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த காய்கறி தோட்டத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள், கீரை வகைகள் முருங்கை, வாழை போன்ற மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. அதனை தொடர்ந்து திருவாடானை வட்டாரவளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா ஊராட்சி மன்ற தலைவர் கடம்பாகுடி கணேசன் ஆகியோர் இங்குள்ள தோட்டத்தில் விளைந்த கீரைகளை இந்த ஊராட்சியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.  அப்போது சத்தான காய்கறி, பழங்கள் உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் வீடுகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைத்து பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.  இதேபோல் திருவாடானை ஊராட்சியில் சமத்துவபுரம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தில் பயிரிடப்பட்டு முளைத்த கீரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் இலக்கியாராமு, ஒன்றிய கவுன்சிலர் செங்கை ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story