பாதயாத்திரை சென்ற காங்கிரசார் 96 பேர் கைது


பாதயாத்திரை சென்ற காங்கிரசார் 96 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2021 10:49 PM IST (Updated: 20 Feb 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறை மற்றும் குத்தாலத்தில் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 96 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறை மற்றும் குத்தாலத்தில் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 96 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாதயாத்திரை 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் இருந்து கொள்ளிடம் வரை பாதயாத்திரை செல்ல முயன்றனர். முன்னதாக காவிரி நகரில் இருந்து நகர காங்கிரஸ் தலைவர் ராமானுஜம் தலைமையில் அக்கட்சியினர் புறப்பட்டனர். பூக்கடை தெரு வழியாக கூறைநாடு வந்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
 தொடர்ந்து பாதயாத்திரை செல்ல முயன்ற ராமானுஜம், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அன்பழகன், ராஜா, நிர்வாகிகள் மதிவாணன், ராஜேந்திரன், ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் 6 பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று அங்கு தங்க வைத்தனர்.
குத்தாலம் 
இதேபோல் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் குத்தாலத்தில் இருந்து கொள்ளிடம் வரையிலான பாதயாத்திரை தொடங்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.ராஜகுமார் தலைமை தாங்கினார். பாதயாத்திரையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரையாக சென்றவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பியபடி சென்றனர். அப்போது குத்தாலத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி திலகர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பாதயாத்திரையில் ஈடுபட்ட 69 பேரை குத்தாலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் சீர்காழியிலும் பாதயாத்திரை நடந்தது.

Next Story