மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை வீட்டின் அருகே எரியூட்டும் அவலம்


இறந்தவரின் உடல் வீட்டின் அருகே எரியூட்டப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.
x
இறந்தவரின் உடல் வீட்டின் அருகே எரியூட்டப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 20 Feb 2021 6:52 PM GMT (Updated: 20 Feb 2021 6:52 PM GMT)

ஆண்டிமடம் அருகே மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை வீட்டின் அருகே எரியூட்டும் அவல நிலை உள்ளது.

ஆண்டிமடம்:

மயான வசதி இல்லை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விளந்தை அருகே அருந்ததியர் நகர் உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்களது உடலை அடக்கம் செய்ய தனி சுடுகாடு இல்லாததால், இறந்தவர்களின் உடலை தூக்கிக்கொண்டு தனியார் விவசாய நிலத்தில் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஓடை வாரி அருகே எரியூட்டி வந்தனர். மேலும் தனியார் விவசாய நிலங்களை கடந்து செல்லும் போது, நில உரிமையாளர்கள் அந்த வழியாக செல்வதற்கு அனுமதி அளிப்பதில்லை.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த ஒரு முதியவரின் உடலை சாலை ஓரத்தில் வைத்து எரித்து, ஈமச்சடங்கை முடித்துள்ளனர். இந்த அவலத்தை தவிர்க்க மயான கொட்டகை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வீட்டின் பின்புறம் தகனம்
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் இறந்த கலியபெருமாள் (வயது 85) என்ற முதியவரின் உடலை, அவருடைய வீட்டின் பின்புறத்தில் வைத்து இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக எங்களுக்கென்று தனி மயான கொட்டகை இல்லாததால், சாலையின் ஓரமாகவும், சிலர் வீட்டின் பின்புறமும் இறந்தவர்கள் உடலை எரியூட்டும் அவல நிலை உள்ளது. இதனால் குழந்தைகள், இளம் வயதினர் மிகுந்த அச்சமடைந்து அவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, எங்களுக்கு தனியாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தனர்.

Next Story