மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் முயற்சி
தா.பழூர் அருகே மணல் அள்ள அனுமதிக்காததால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தா.பழூர்:
மணல் அள்ள சென்றனர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர், உதயநத்தம் பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ளுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜெயங்கொண்டம், வானதிரையன்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 13 மாட்டு வண்டிகளில் மணல் அல்ல மாட்டு வண்டி தொழிலாளர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ரோந்து பணியில் இருந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, உரிய அனுமதியின்றி மணல் எடுக்கக்கூடாது, எனவே கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும், மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல் முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி ெதாழிலாளர்கள் நேற்று காலை மாட்டு வண்டிகளுடன் சிலால் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீசார், மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மாட்டு வண்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி தொழிலாளர்கள் மறியல் செய்ய முயன்றனர்.
அப்போது தொழிலாளர்களை கடுமையாக எச்சரித்த போலீசார், அரசுக்கு மனு அளித்து முறைப்படி மாட்டு வண்டி மணல் குவாரி உரிமையை பெற்று, அதன் பின்னர் மணல் அள்ளுங்கள் என்று தெரிவித்தனர். மேலும் மாட்டு வண்டிகளை அங்கிருந்து ஓட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story