நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச 2 ஜி.பி.டேட்டா கார்டு அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


நெல்லை மாவட்டத்தில்  கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச 2 ஜி.பி.டேட்டா கார்டு  அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 21 Feb 2021 1:02 AM IST (Updated: 21 Feb 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச 2 ஜி.பி. டேட்டா கார்டை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச 2 ஜி.பி. டேட்டா கார்டை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான தச்சை கணேசராஜா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி நரிக்குறவர் சமுதாயத்தினர் 2 பேருக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய 2 லோடு ஆட்டோக்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் ரூ.50 லட்சத்து 42 ஆயிரத்து 765 மதிப்பில் 83 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் பொருத்திய மூன்று சக்கர வாகனம், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவியாக ரூ.4½ லட்சம் மதிப்பில் தலா ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

அமைச்சர் வழங்கினார்

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 19 கல்லூரியைச் சேர்ந்த 22 ஆயிரத்து 817 மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக 2 ஜி.பி டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டது. மேலும் 721 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், பட்டப்படிப்பு முடித்த 3 ஆயிரத்து 186 பெண்களுக்கு தலா ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் ரூ.50 ஆயிரம் திருமண உதவி தொகையும், பிளஸ்-2 முடித்த 1,812 பெண்களுக்கு தலா ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் ரூ.25 ஆயிரம் திருமண உதவித்தொகை என மொத்தம் ரூ.20 கோடியே 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2¾ லட்சம் மதிப்பில் வீடு கட்டும் ஆணையை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

விழாவில் முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், சவுந்தர்ராஜன், மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story