வள்ளியூரில் திருநங்கைகள் சாலை மறியல்
வள்ளியூரில் திருநங்கைகள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வள்ளியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதையொட்டி வள்ளியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு திருநங்கைகள் சென்றனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால், திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள், வள்ளியூர் பஸ் நிலையம் எதிரில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story