35 வாகனங்களுக்கு ரூ5¼ லட்சம் அபராதம்
கடலூரில் விடிய விடிய நடந்த வாகன சோதனையில் 35 வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ரூ.5¼ லட்சம் அபராதம் விதித்தார்.
கடலூர்,
பஸ்களின் பக்கவாட்டு கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. கண்ணாடிகளை ‘ஸ்கீரின்’ துணி போட்டு மறைக்கக்கூடாது, டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு ஆம்னி பஸ்களின் கண்ணாடிகளில் உள்ள ஸ்கீரின் துணிகள், ஸ்டிக்கர் இதுவரை அகற்றப்படவில்லை.
அவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
35 வாகனங்களுக்கு அபராதம்
அந்த வகையில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கடலூர் அண்ணா பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 ஆம்னி பஸ்கள், 15 ஆம்னி வேன், ஒரு கார் ஆகிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் அதிகளவில் பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் மொத்தம் 35 வாகனங்களுக்கு ரூ.5¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story