விருத்தாசலம் பகுதியில் பரவலாக மழை
விருத்தாசலம், சிறுபாக்கம் பகுதியில் பெய்த மழையால் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம்,
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.
நெல் மூட்டைகள் சேதம்
இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் இரவில் திடீரென பெய்த கனமழையால் சிறுபாக்கம் பகுதியில் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.
அதாவது சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, தற்காலிக கொள்முதல் நிலையங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கவலை
அந்த வகையில் சிறுபாக்கம் தற்காலிக கொள்முதல் நிலையத்தில், 4 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக நேற்று முன்தினம் வைக்கப்பட்டிருந்தது. அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நள்ளிரவில் பெய்த கனமழையில் நனைந்து சேதமானது. இதுபற்றி அறிந்த விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு வந்து, சேதமான நெல் மூட்டைகளை பார்த்து கண்ணீர் விட்டனர். இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, பெலாந்துரை, ஸ்ரீமுஷ்ணம், குடிதாங்கி, கீழ்செருவாய், வானமாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story