கரூரில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா


கரூரில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 21 Feb 2021 2:05 AM IST (Updated: 21 Feb 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பாராட்டு விழா நடக்கிறது.

கரூர்:
கரூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் இருந்து காரில் புறப்பட்டு கரூர் வந்தடைகிறார். கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு, கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
 தொடர்ந்து கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 100 அடியில் வைக்கப்பட்டுள்ள கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, முன்னாள் முதல்-அமைச்சர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து கரூர் பஸ்நிலையம், வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கரூர்-வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் உழவன் திருவிழா மற்றும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில், முதல்-அமைச்சர் கலந்துகொண்டு விவசாயிகளின் பாராட்டை ஏற்று சிறப்புரையாற்றுகிறார்.
 மேலும் விவசாய கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story