திருமூர்த்திமலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி பொதுமக்கள் கோரிக்கை


திருமூர்த்திமலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2021 2:24 AM IST (Updated: 21 Feb 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்திமலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி பொதுமக்கள் கோரிக்கை

தளி:-
திருமூர்த்திமலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமூர்த்தி மலை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாது. 
இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.
கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது. இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இதில் கலந்துகொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அத்துடன் வார விடுமுறை நாட்கள் பொது மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்ற வாகனங்களை நிறுத்துவதற்கு திருமூர்த்திமலையில் இட வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை. 
இதனால் வாகனங்கள் உடுமலை திருமூர்த்திமலை சாலையின் இருபுறங்களிலும் மற்றும் கோவில் பகுதியிலும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது அரசு விடுமுறை நாட்களில் தனியார் வாகனங்கள் கோவில் பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இதனால் அரசு பஸ்கள் கோவில் வரையிலும் இயக்கப்படுவதில்லை.
வாகன நிறுத்தும் இடம்
மாறாக பயணிகள் அனைவரும் படகு இல்லத்தின் முன்பாகவே இறக்கி விடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் கோவில் வரையிலும் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது வயதான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே திருமூர்த்திமலை பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தருவதுடன் அரசு பஸ்களை அனைத்து நாட்களும் கோவில் வரையிலும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story