தமிழகத்தில் 2-வது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியம் இல்லை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில்  2-வது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியம் இல்லை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2021 2:40 AM IST (Updated: 21 Feb 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2-வது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியம் இல்லை என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி, 
தமிழகத்தில் 2-வது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியம் இல்லை என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரத்துறையை சேர்ந்த பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக காவல்துறையினர், வருவாய்துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். பின்னர் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தடுப்பூசியை திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று போட்டு கொண்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முககவசம் அணிய வேண்டும் 

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த தொடர் நடவடிக்கையால் தற்போது கொரோனா தாக்கம் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் லேசாக அதிகரிப்பதுபோல் இருந்தாலும், தமிழகத்தில் 500 பேருக்கும் குறைவாகத்தான் இருந்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 

தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையினர், காவல்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களாக இதுவரை 3 லட்சத்து 59 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்துக்கு 14 லட்சத்து 85 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1 லட்சத்து 89 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. நான் இன்று (நேற்று) திருச்சியில் 2-வது தடுப்பூசியை போட்டு கொண்டேன். கோவாக்சின் தடுப்பூசி குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன்.

கொரோனா 2-வது அலை 

தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து யாரும் அச்சப்படதேவையில்லை. மருத்துவர்களின் உரிய ஆலோசனைபடி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 2-வது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியம் இல்லை. இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி இறப்பு விகிதத்தை மிகவும் கட்டுப்படுத்திவிட்டார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி அதிகமாக செய்யப்படுவதாக மத்திய அரசு கூறி உள்ளது. ஆகவே பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களுடன் தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், டீன் வனிதா மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்.

தற்காலிக பணியாளர்கள் கோரிக்கை

இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புறப்பட்டு செல்லும்போது, அவரிடம் மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “நாங்கள் கடந்த 6 மாதங்களாக கொரோனா பணிக்காக தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு, 65 பேர் செவிலியர் பணி உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறோம். எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எங்கள் ஊதியத்தை பெற்றுத்தருவதுடன் பணி நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர்.

Next Story