தவறாக ஆபரேஷன் செய்யப்பட்டதால் தொழிலாளி சாவு; மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


தவறாக ஆபரேஷன் செய்யப்பட்டதால் தொழிலாளி சாவு; மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Feb 2021 4:58 PM IST (Updated: 21 Feb 2021 4:58 PM IST)
t-max-icont-min-icon

தவறாக ஆபரேஷன் செய்யப்பட்டதால் தொழிலாளி இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

தவறாக ஆபரேஷன் செய்யப்பட்டதால் தொழிலாளி இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 தொழிலாளிக்கு உடல்நலம் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடியை சேர்ந்தவர் சம்பத் (வயது 42), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பத்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால் இழுத்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்த கசிவு இருப்பது தெரியவந்தது. 

சிகிச்சை பலனின்றி சாவு

அதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 18-ந்தேதி தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

பின்னர் சம்பத்திற்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர்  இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை

தவறாக ஆபரேஷன் செய்யப்பட்டதால் தான் சம்பத் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story