சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது கோர்ட்டு, போலீஸ்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்


சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது கோர்ட்டு, போலீஸ்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2021 5:21 PM IST (Updated: 21 Feb 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது கோர்ட்டு, போலீஸ்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசனை.

சென்னை, 

குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் விசாரணையை தீவிரப்படுத்துவது பற்றியும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் நீதித்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் வழக்கம். அந்தவகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சென்னை பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோதண்டராஜ் முன்னிலையில் நேற்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ்டவுன், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய குற்றவியல் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சாட்சிகள் விசாரணையை மேம்படுத்துதல், பிடி வாரண்டுகளை நிறைவேற்றுதல், நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்று தருதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. நீதிமன்ற நடைமுறைகளுடன் காலம் தாழ்த்தாமல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விசாரணை போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைமை மாஜிஸ்திரேட்டு கோதண்டராஜூக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நினைவு பரிசு வழங்கினார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தமிழக அரசால் போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார்.

Next Story