சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க பூண்டி ஏரியில் கம்பி வேலி அமைக்கும் பணி நிறைவு


சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க பூண்டி ஏரியில் கம்பி வேலி அமைக்கும் பணி நிறைவு
x
தினத்தந்தி 21 Feb 2021 6:56 PM IST (Updated: 21 Feb 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. 1940-ம் ஆண்டு தொடங்கி 1944-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஏரி 760 சதுர மைல் பரப்பளவு கொண்டது. 3 ஆயிரத்து 233 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

ஏரி அருகே பச்சை பசேலென புல் தரைகள், பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் அருங்காட்சியகம் உள்ளது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி இதர பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூண்டிக்கு வருவதுண்டு. இப்படி வரும் சுற்றுலா பயணிகள் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியில் சங்கமிக்கும் குளோசிங் பாயிண்ட் பகுதியில் குளித்து மகிழ்வார்கள்.

கம்பி வேலிகள்

இப்படி கிருஷ்ணா கால்வாயில் குளிக்கும்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணா கால்வாயில் குளிக்கக்கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய பெரிய எச்சரிக்கை பலகைகள் வைத்தும் பலர் இப்படி கால்வாயில் இறங்கி உயிரை மாய்த்து கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் கால்வாயில் விழுந்து உயிரிழந்தன. இதனை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிருஷ்ணா நதி கால்வாய் குளோசிங் பகுதியில் கால்வாய்க்கு இருபுறங்களிலும் 284 மீட்டர் தூரத்துக்கு கம்பி வேலி அமைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் கம்பி வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரதீஷ் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பணிகள் நேற்று முடிவடைந்தன. இரும்பு வேலி அமைக்கப்பட்டதால் கிருஷ்ணா கால்வாயில் குளோசிங் பாயிண்ட் பகுதியில் இனி யாரும் குளிக்க முடியாது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story