தூத்துக்குடியில் பொன்னுச்சாமி வில்லவராயர் நூற்றாண்டு விழா


தூத்துக்குடியில் பொன்னுச்சாமி வில்லவராயர் நூற்றாண்டு விழா
x
தினத்தந்தி 21 Feb 2021 8:43 PM IST (Updated: 21 Feb 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை சேர்ந்த மறைந்த முன்னாள் மேல்சபை உறுப்பினர் பொன்னுசாமி வில்லவராயர் நூற்றாண்டு விழா, தூத்துக்குடி பாஸ்கரன் திருமண மகாலில் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த மறைந்த முன்னாள் மேல்சபை உறுப்பினர் பொன்னுசாமி வில்லவராயர் நூற்றாண்டு விழா, தூத்துக்குடி பாஸ்கரன் திருமண மகாலில் நடந்தது. விழாக்குழு தலைவர் பொனோ வெஞ்சர் ரோச் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், விவேகம் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு பொருளாளர் சேசையா வில்லவராயர் வரவேற்று பேசினார்.
மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் அறிமுக உரையாற்றினார். பொன்னுசாமி வில்லவராயர் நூற்றாண்டு நினைவு தபால் உறையை கனிமொழி எம்.பி. வெளியிட, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பெற்றுக் கொண்டார். விழா மலரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட, பிரின்ஸ் எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில், பொன்னுசாமி வில்லவராயர் தூத்துக்குடி பகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து உள்ளார். அவர் தொழில் அதிபராக பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். தொழிலாளர்கள் மீது பற்று கொண்டு பல்வேறு உதவிகளை செய்து, அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பாடு அடைவதற்கு பாடுபட்டார்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் பொன்னுசாமி வில்லவராயர், அப்போதே இளைஞர்களை ஒன்று திரட்டி பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவர்கள் அரசியலுக்கு வராவிட்டாலும், இதுபோன்று தொடர்ந்து தொண்டு செய்ய வேண்டும் என்று கூறினார்.
விழாவில் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சிசில் மச்சாடோ நன்றி கூறினார்.

Next Story