பஞ்சலிங்க அருவி பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தும் பணி பேரிடர் மேலாண்மை துறையினர் தீவிரம்


பஞ்சலிங்க அருவி பகுதியில்  வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தும் பணி பேரிடர் மேலாண்மை துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:13 PM IST (Updated: 21 Feb 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சலிங்க அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தும் பணியை பேரிடர் மேலாண்மை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தளி, 
பஞ்சலிங்க அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தும் பணியை பேரிடர் மேலாண்மை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சலிங்க அருவி
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர். 
பஞ்சலிங்க அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள்  வருகை தருகின்றனர். பஞ்சலிங்க அருவி அடர்ந்த வனப்பகுதியை நீராதாரமாக கொண்டுள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால் அருவியில் குளித்து மகிழ்கின்ற பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.
எச்சரிக்கை கருவி
அதைத்தொடர்ந்து வெள்ளப்பெருக்கை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் கருவியை பொருத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ரூ. 2.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து எச்சரிக்கை கருவி பொருத்தும் பணி பஞ்சலிங்க அருவிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. 
நீர்வீழ்ச்சியில் தொடுஉணர் (சென்சார்) பொருத்தும் பணி இந்தியாவிலேயே முதன் முதலாக திருமூர்த்திமலையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பேரிடர் மேலாண்மை வளம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் செயல் இயக்குனர் பிராங்கிளின் தலைமையில் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
முதல்கட்டமாக உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு அருவிக்கு தண்ணீர் வரும் வனப்பகுதியில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சென்சார் பொருத்தும் நிகழ்வும் ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பணி விரிவுபடுத்தப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர், தாசில்தார், கோவில் நிர்வாகம், தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையினர் உள்ளிட்டோர் இந்த கருவி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்ய இயலும். இந்த பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் அச்சமில்லாமல் குளிக்கலாம் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்று பஞ்சலிங்க அருவி பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

Next Story