வேளாங்கண்ணியில் தத்ரூபமாக தயாரிக்கப்படும் சொரூபங்கள்
கிறிஸ்தவ பேராலயங்களை அழகுப்படுத்தி வரும் சொரூபங்கள் வேளாங்கண்ணியில் தத்ரூபமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. நலிவடைந்து வரும் இந்த தொழிலுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்?-
கிறிஸ்தவ பேராலயங்களை அழகுப்படுத்தி வரும் சொரூபங்கள் வேளாங்கண்ணியில் தத்ரூபமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. நலிவடைந்து வரும் இந்த தொழிலுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம்
மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் திகழ்கிறது.
கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்ககூடிய பசிலிக்கா என்ற பெருமை மிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்துக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
சொரூபங்கள்
இந்த பேராலயத்தை சுற்றி உள்ள பேராலய கெவி, சிலுவைப்பாதை, முடவனுக்கு காட்சி கொடுத்த ஆலயம், விண்மீன் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பேராலயத்தின், அழகுக்கு கூடுதல் மெருகேற்றுகிறது. இதனை வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்த சொரூபங்கள் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டாலும், அதில் வேளாங்கண்ணி செட்டி தெருவில் தயாரிக்கப்பட்டவைகளுக்கு தனி சிறப்பாகும்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் உள்ள மாதா, சூசையப்பர், ஏசு, குழந்தை மாதா, குழந்தை ஏசு, அந்தோணியார், சகாயமாதா உள்ளிட்ட சொரூபங்களும், முடவனுக்கு காட்சி கொடுத்த ஆலயத்தில் உள்ள முடவன், பால்காரன் சிறுவன், மாதா உள்ளிட்டவைகளும், தவக்காலத்தை எடுத்துரைக்கும் சிலுவைப் பாதையில் இடம்பெற்ற சிலுவை சுமக்கும் ஆண்டவர், போர்வீரர்கள், அருளப்பர், சீயோன், மாதா, சிலுவை ஏசு உள்ளிட்ட சொரூபங்களும் செட்டி தெருவில் தயார் செய்யப்பட்டவையாகும்.
தத்ரூபமாக தயார் செய்யப்படுகிறது
பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த சொரூபங்களை பார்த்து விட்டு, செய்யும் இடத்துக்கே நேரில் வந்து ஆர்டர் கொடுத்து விட்டு செல்கின்றனர்.வேளாங்கண்ணி செட்டி தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு தொழிலாக சொரூபங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பம்சத்துடன் தத்ரூபமாக சொரூபங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் விமலா மார்கிரேட் கூறியதாவது:-
கத்தோலிக்க தேவாலயங்களின் அழகை பறைசாற்றும் விதமாக சொரூபங்கள் விளங்குகின்றன. இத்தகைய சொரூபங்கள் திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்படுகிறது. இது தவிர வேளாங்கண்ணியில் நாங்கள் தயாரித்து வருகிறோம்.
ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்
பாரிஸ்சாந்து, சிமெண்ட், பைபர் என 3 விதமாக சொரூபங்களை தயார் செய்து வருகிறோம். சிமெண்ட், பைபரை விட பாரிஸ் சாந்தில் அதிக சொரூபங்கள் தயார் செய்யப்படுகிறது. 2 அடி முதல் 6 அடி உயரம் வரை சொரூபங்கள் செய்கிறோம், இவற்றை ரூ.2,500 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம். இதில் பாரிஸ் சாந்தில் தயார் செய்யப்பட்ட சொரூபத்தையே பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
முதலில் உருவத்துக்கு ஏற்றவாறு உடல், முகம், கை என தனித்தனி அச்சில், கிரீஸ் தடவி பாரிஸ் சாந்து கலவையை போட்டு காய வைப்போம். பக்குவத்துக்கு ஏற்றபடி காய்ந்த உடன், அதனை தனியாகப் பிரித்து தேய்ப்பு தாளை் கொண்டு பாலிஸ் செய்வோம். பின்னர் கைகளாலேயே முகத்துக்கு வடிவம் கொடுப்போம். இதை தொடர்ந்து அனைத்து பாகங்களையும் ஒன்று சேர்த்து வர்ணம் பூசுவோம். இங்கு தயார் செய்யப்படும் சொரூபங்கள், மானாமதுரை, சின்ன சேலம், சேலம், ராசிபுரம், சென்னை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க கைகளாலேயே செய்வதால் சொரூபங்களில் முகத்தோற்றம் என்பது தத்ரூபமாக இருக்கும். இதனால் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள், எங்களை தேடிவந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
மானியத்துடன் கடன்
ஒரு சொரூபம் செய்ய குறைந்தது ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது குடில் சொரூபங்களுக்கும், ஈஸ்டர் பண்டிகையின் போது பாடுபட்ட ஆண்டவர், உயிர்த்த ஆண்டவர் சொரூபங்களுக்கும் ஆர்டர் கொடுப்பார்கள். ஆலய திருவிழா உள்ளிட்ட நாட்களில் ஆரோக்கிய மாதா சொரூபங்களை அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்வார்கள்.
இந்த சிறு தொழிலை எனது மாமனார் பீட்டர் பல ஆண்டுகளாக செய்து வந்தார். அவருக்கு பிறகு நான் இந்த தொழிலை நடத்தி வருகிறேன். தற்போது எங்களிடம் 4 பெண்கள் உள்பட 6 பேர் வேலை செய்து வருகின்றனர். மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், தொழில் செய்ய கடினமாக உள்ளது. இதை தவிர வேறு தொழில் எதுவும் எங்களுக்கு தெரியாது. எனவே நலிவடைந்து வரும் இந்த சிறு தொழிலுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story