கும்பகோணத்தில் மாசிமக திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா வழக்கமான முறைப்படி நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்


கும்பகோணத்தில் மாசிமக திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா வழக்கமான முறைப்படி நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 Feb 2021 4:45 PM GMT (Updated: 21 Feb 2021 4:45 PM GMT)

கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதி உலா வழக்கமான முறைப்படி நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கும்பகோணம், 

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்பட 6 சிவன் கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 வைணவ கோவில்களில் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 4-ம் நாள் விழாவையொட்டி சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் வீதி உலாவாக ஆதிகும்பேஸ்வரர் கோவில் வீதி மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம். இதை இரட்டை வீதி உலா என அழைப்பார்கள்.

பக்தர்கள் ஏமாற்றம்

ஆனால் நேற்று நடந்த 4-ம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா ஆதிகும்பேஸ்வரர் கோவில் வீதிகளில் மட்டும் நடந்தது. நாகேஸ்வரர் கோவில் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் அங்கு நாயன்மார்கள் வீதிஉலா நடைபெறவில்லை.

மாசிமக திருவிழாவில் நாயன்மார்கள் வீதிஉலா வழக்கமான முறைப்படி நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story