தஞ்சை அருகே, திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்:-
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நேற்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம் என வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டை கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் காளையாக திருக்கானூர்பட்டியை சேர்ந்த காளை வாடிவாசல் வழியாக அவித்து விடப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் காளைகள் வரிசையாக சீறிபாய்ந்து வந்தன.
பின்னர் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து மிரட்டலாக சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். பெரும்பாலான காளைகளை மாடுபிடி வீரர்களால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை.
மிரட்டிய காளைகள்
சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை பந்தாடியது. தனது அருகில் கூட நெருங்க விடாமல் வீரர்களை மிரட்டியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். நன்றாக பயிற்சி பெற்ற ஒரு சில காளைகள் மைதானத்தில் சில நிமிடங்கள் வரை நின்று களமாடியது. இதை அனைவரும் கை தட்டியும், விசில் அடித்தும் ரசித்தனர்.
சில காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்து சென்றபோது வீரர்கள் தரையில் படுத்து கொண்டனர். சில காளைகள் தன்னை தொட்டுப்பார் என வீரர்களை நெருங்கவிடாமல் மிரட்டின. அப்போது வீரர்கள் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறி கொண்டனர். சில காளைகள் தங்களை எதிர்நோக்கி வந்த வீரர்களை தூக்கி வீசி விட்டு அவர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றன.
பரிசுகள்
ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளை அடக்க காளையர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. சீற்றத்துடன் சீறிப்பாய்ந்த சில காளைகளை பார்த்து மாடுபிடி வீரர்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினர். மேலும் தங்களை பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களை, சில காளைகள் கொம்புகளால் முட்டி பந்தாடியது. சாதுரியமாக செயல்பட்டு காளைகளை வீரர்கள் அடக்கினர். வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சென்ற ஓரிரு காளைகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறின. அந்த நேரத்தில் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவித்து அதன் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் காளையை பிடித்தபோதும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காளைகளின் திமிலை துணிச்சலாக சில வீரர்கள் பிடித்தனர். ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே பிடித்தால் அந்த வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. பிரிட்ஜ், பீரோக்கள், சைக்கிள், கட்டில்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
24 பேர் படுகாயம்
ஜல்லிக்கட்டு மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 607 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் 593 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்க 356 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இவர்களில் 347 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு, 7 பிரிவுகளாக களமிறக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்றவர்களுக்கு வெவ்வேறு விதமான வண்ணங்களில் பனியன் வழங்கப்பட்டது.
காளைகள் முட்டியதில் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இவர்களில் 8 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
களைகட்டிய திருவிழா
ஜல்லிக்கட்டை காண பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் திருவிழாவுக்கு வருவதைபோல் வந்ததால் களைகட்டியது. இவர்களுக்கு தண்ணீர் தாகம் போக்க ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்தன. கம்பங்கூழ், தர்ப்பூசணி, தண்ணீர் பாட்டில், சர்பத், உணவு பொருட்கள் ஆகியவைகளை விற்பனை செய்வதற்காக ஏராளமான தரைக்கடைகளும், தள்ளுவண்டி கடைகளும் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டையொட்டி பிரச்சினைகள் ஏதும் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் 300-க்கும் அதிகமான போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேவியர், இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், அஞ்சப்பன் ஓட்டல் உரிமையாளர் ஏழுப்பட்டி மோகன், மாப்பிள்ளைநாயக்கன்பட்டி அமிர்த விலாஸ் ஓட்டல் உரிமையாளர் தனபால், திருக்கானூர்பட்டி அன்னை இளைஞர் இயக்க நிர்வாகிகள் ஆம்ஸ்ட்ராங், அந்தோணி, டைமண்ட் ஏஜென்சி உரிமையாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story