கும்பகோணம் அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை கணவன்- மனைவி கைது
கும்பகோணம் அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருப்பனந்தாள்:-
கும்பகோணம் அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மேலவெளி இருமூலையை சேர்ந்தவர் வில்லியானம். இவருடைய மகன் மகேந்திரன்(வயது40). லாரி டிரைவர். இவரது உறவினர் அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிமாறன்(38). இவரும் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். மகேந்திரன் குடும்பத்துக்கும் மணிமாறன் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
அடித்துக்கொலை
நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் மகேந்திரன், அவரது மனைவி மகாலட்சுமி, அவரது தாய் காளியம்மாள் ஆகியோர் தங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிமாறன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் முன்விரோதம் காரணமாக கட்டை மற்றும் செங்கல்லால் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி, தாய் காளியம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் மற்றும் அவரது மனைவி, தாய் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். தாக்குதலில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி மற்றும் காளியம்மாள் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது
இதுகுறித்து மகேந்திரன் தந்தை வல்லியானம் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறன் அவரது மனைவி கவிதா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story