விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதில் நெல் மூட்டைகளை நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 19-ந்தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு சாரல் மழை பெய்தது.
இந்த மழை விட்டு விட்டு மதியம் வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வழிந்து ஓடியது.
விவசாயிகள் கவலை
இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இதனிடையே திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல்மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் மற்றும் விற்பனைக்கூடம் முன்பு வெட்டவெளியில் வைத்திருந்தனர். இந்த நிலையில் பெய்த மழையால் 100-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் நனைந்து சேதமானது.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் அவர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இனி இது போன்று நடைபெறாமல் இருக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் கட்டிட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்பூசணி
பிரம்மதேசம் பகுதியில் பெய்த மழை காரணமாக புதுப்பாக்கம், ஆலங்குப்பம், முன்னூர், காடுவெட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த தர்பூசணி, நெல், மணிலா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து பயிர்களை காப்பாற்ற வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மழையால் பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இதேபோல் திண்டிவனம், மயிலம், செஞ்சி, மரக்காணம் உள்பட விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story