வெவ்வேறு விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 4 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 21 Feb 2021 7:07 PM GMT (Updated: 21 Feb 2021 7:07 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 4 பேர் பலியாகினர்.

தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 4 பேர் பலியாகினர்.
என்ஜினீயர் பலி
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள டி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் தாடிக்கொம்பு நோக்கி பழனி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே மதுரையில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்றி வந்த லாரியை, அதன் டிரைவர் சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த வழியாக கார்த்திகேயன் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், காரில் இருந்த கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
லாரிகள் மோதல்
இதேபோல் நாமக்கல் மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சக்தீஸ்வரன் (35). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் டேங்கர் லாரியில் பெட்ரோல் நிரப்பி கொண்டு கரூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, முன்னால் வெங்காயம் ஏற்றி சென்ற மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய சக்தீஸ்வரன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனார். அவருடன் வந்த கிளீனர் விக்னேசுரன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, லாரியின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சக்தீஸ்வரனின் உடலை மீட்டனர். மேலும் விக்னேசுவரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். 
கொத்தனார், மில் ெதாழிலாளி
பழனி தேரடி பகுதியை சேர்ந்தவர் நாட்டுத்துரை (வயது 38). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் கோரிக்கடவில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் பழனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பழைய பழனி-தாராபுரம் சாலையில் மானூர் அருகே நாட்டுத்துரை வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழேவிழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாட்டுத்துரை இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (57). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லட்சுமணம்பட்டியில் நான்கு வழிச்சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, முத்துசாமி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story