திருப்பூரில் கத்தி முனையில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி


திருப்பூரில் கத்தி முனையில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி
x
தினத்தந்தி 21 Feb 2021 8:06 PM GMT (Updated: 21 Feb 2021 8:06 PM GMT)

திருப்பூரில் கத்தி முனையில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி

அனுப்பர்பாளையம், பிப். 22-
திருப்பூரில் கத்தி முனையில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவன தொழிலாளி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த சூரானம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் திருப்பூர் பெரியார்காலனியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை  டி.டி.பி. மில் ரோடு அருகே கருப்பராயன் கோவில் வீதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்து இறங்கிய டிரைவர் உள்பட 3 பேர் கண்ணனிடம் வழிகேட்டுள்ளனர். 
அவர் வழிகூறும் முன்பு அந்த ஆசாமிகள், திடீரென கண்ணனின் சட்டையை பிடித்து இழுத்து பையில் உள்ள பணத்தை கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் பணத்தை தர மறுத்துள்ளார். இதையடுத்து 3 பேரில் ஒருவர் காரில் இருந்த கத்தியை எடுத்து வந்து கண்ணன் கழுத்தில் வைத்து பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார். இதனால் பயந்துபோன அவர் ‘திருடன் திருடன்’ என்று கூச்சல் போட்டுள்ளார். ஆனால் 3 பேரும் கண்ணன் சட்டை பையில் இருந்த ரூ.5 ஆயிரத்து 200 பணத்தை பறித்து கொண்டு, அவரை தள்ளி விட்டு அதே  காரில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கண்ணன் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

தாக்குதல்

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் உள்ளிட்ட போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் காந்திநகர் சிக்னல் அருகே ஒரு காரை பொதுமக்கள் வழிமறித்து, அதில் இருந்த 3 பேரை பிடித்து சரமாரியாக தாக்குவதாக இன்ஸ்பெக்டர் முனியம்மாளுக்கு  தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த 3 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வயலூர் ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற சூர்யா ஜெகதீஸ் (வயது 26), திருப்பூர் காந்திநகரை அடுத்த தியாகி பழனிசாமி நகரை சேர்ந்த மற்றொரு சூர்யா (24), நீலகிரி மாவட்டம் கூடலூர் கொக்கக்காடு பகுதியை சேர்ந்த பைசல் (29) என்பது தெரிய வந்தது. 

3 பேர் கைது

மேலும்  கண்ணனிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் இவர்கள்தான் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பின்பு இந்த 3 பேரும் வலையங்காடு வழியாக காரில் பதற்றத்துடன் வேகத்தில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த பெண், நடந்து சென்றவர்கள் உள்பட 5 பேர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த காரை விரட்டி சென்று, காந்திநகர் அருகே மடக்கி பிடித்து, அதில் இருந்த 3 பேருக்கும் தர்மஅடி கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதில் மொபட்டில் சென்ற பெண் காயமடைந்து குமார்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

இதையடுத்து சூர்யா என்கிற சூர்யா ஜெகதீஸ், மற்றொரு சூர்யா, பைசல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார், வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும்  ரூ.5200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட 3 பேரில் சூர்யா என்கிற சூர்யா ஜெகதீஸ், சூர்யா ஆகியோர் மீது திருப்பூர், சிவகங்கை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருப்பூரில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் சம்பவமாக காரில் வந்து கத்தி முனையில் தொழிலாளியிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story