கவுசிகா நதி தூய்மைப்படுத்தப்படுமா?


கவுசிகா நதி தூய்மைப்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 21 Feb 2021 8:17 PM GMT (Updated: 21 Feb 2021 8:17 PM GMT)

விருதுநகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கவுசிகா நதியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,
விருதுநகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கவுசிகா நதியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 கவுசிகா நதி
 விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சியிலிருந்து மழைக்காலங்களில் கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் காட்டாற்று வெள்ளநீர் கவுசிகாநதியில் நகரின் மையப்பகுதி வழியாக சென்று குல்லூர்ச்சந்தை அணையை சென்றடைகிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தான் தண்ணீர் ஓடக்கூடிய நிலையில் தற்போது முற்றிலுமாக கழிவு நீர் செல்லும் நிலை ஏற்பட்டு நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
 ஆக்கிரமிப்பு 
மேலும் ஆற்றுப்படுகைகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அகண்ட இந்த நதி தற்போது ஆடு தாண்டும் ஓடையாக மாறி விட்ட நிலை உள்ளது.
 ஏற்கனவே இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக தற்போதைய அமைச்சர் மாபா பாண்டியராஜன் இருந்தபோது நதியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் முறையாக செய்யப்படாததால் மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பொதுப்பணித்துறையினர் இந்த பணிகளை முறையாக செய்யாததால் தொடர்ந்து கவுசிகா நதி ஆக்கிரமிப்புகளில் சிக்கி உள்ள நிலையில் கருவேல மரங்கள் அடர்ந்து நதியின் போக்கை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
வலியுறுத்தல் 
 மேலும் நதியில் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நதியில் கழிவுநீர் சென்றடைவதால் குல்லூர்ச்சந்தை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறையினர்ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நிதி பெற்று முறையாக இந்த பணியினை மேற்கொண்டு கவுசிகா நதியை தூர்வாரவும் தூய்மைப்படுத்தவும் நதியின் நீர் போக்குபகுதியில் உள்ள கருவேலமரங்களை அகற்றி ஆக்கிரமிப்பிலிருந்து நதியினை விடுவிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான பணிகளை முறையாக கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story