கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்- மாநில தலைவர் பேட்டி
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என மாநில தலைவர் குமரேசன் கூறினார்.
திருச்சி,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
காலவரையற்ற வேலை நிறுத்தம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 17-ந் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறோம். இதில் 7 கோரிக்கைகளை ஏற்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதற்கு முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மீதமுள்ள 3 கோரிக்கைகளான பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 3 அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்றும்வரை எங்களது காலவரையற்ற போராட்டம் தொடரும்.
தேர்தல்
வருவாய்த்துறை அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணி, பொதுவினியோக திட்ட பணி, அரசு நலத்திட்ட உதவிகளை மக்களிடம் சேர்க்கும்பணி என பல்வேறு பணிகளை நேரம், காலம் பார்க்காமல் செய்து வருகிறோம். தற்போது தேர்தல் வரவுள்ள நேரத்தில் வேலை நிறுத்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து இன்றோ, நாளையோ அறிவிப்பு வெளியிட்டால் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க அவசர மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி ரெயில் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் பிரகாஷ், செயலாளர் கலைச்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story