பொள்ளாச்சியில் வங்கியில் கள்ள நோட்டுகளை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை


பொள்ளாச்சியில் வங்கியில் கள்ள நோட்டுகளை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Feb 2021 10:04 PM GMT (Updated: 21 Feb 2021 10:04 PM GMT)

பொள்ளாச்சியில் வங்கியில் கள்ள நோட்டுகளை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் வங்கியில் கள்ள நோட்டுகளை கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் வங்கி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது 55) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 18-ந் தேதி நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்துவதற்காக, பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார்.

பின்னர் வங்கியில் உள்ள காசாளரிடம் தான் கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை கொடுத்து, அதனை தனியார் நிறுவன கணக்கில் டெபாசிட் செய்யுமாறு கூறினார். இதையடுத்து வங்கி காசாளர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணினார். அப்போது சில நோட்டுகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

கள்ள நோட்டு

உடனடியாக இதுகுறித்து காசாளர், வங்கி மேலாளர் செல்வகுமரேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வங்கி ஊழியர்கள் ரூ.2 லட்சத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து சோதனை செய்தனர். சோதனையில் 28 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. 

ரூ.14 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த வங்கி மேலாளர் செல்வகுமரேசன் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் தான் பணியாற்றும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பணத்தை வங்கியில் செலுத்த வந்ததாகவும், அதில் இருந்த கள்ளநோட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார். 

மேலும் தான் வேறு ஒரு வங்கியில் இருந்துதான் பணம் எடுத்து வந்துள்ளேன் என்று கூறி அதற்கான ஆதாரங்களை கொடுத்தார். தொடர்ந்து ரூ.14 ஆயிரம் கள்ளநோட்டுகளுக்கு பதிலாக நல்ல நோட்டுகளை வழங்கினார். இருப்பினும், ரூ.14 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார், விஜயகுமாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story