மாவட்ட செய்திகள்

கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது + "||" + Floating in the flood, the city of Puduvai

கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது

கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது. 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது. 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் புதுவையில் நிவர், புரெவி புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால்  ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. அதன்பின் கடந்த (ஜனவரி) மாதத்தில் மழை பெய்யவில்லை. இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டது.
இந்தநிலையில் வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாகவும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றின் சுழற்சி காரணமாகவும் தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி புதுச்சேரியில் நேற்று முன்தினம் மதியம் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இரவு 10 மணி முதல் மீண்டும் சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது 
நள்ளிரவுக்குப் பிறகும் மழை பெய்தபடி இருந்தது. நேற்று அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. புதுவை ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், கிரு‌‌ஷ்ணா நகர், காமராஜர் சாலை, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, பாவாணர் நகர், பூமியான்பேட், டி.ஆர்.நகர், அண்ணாநகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம், சுதானா நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.  வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். டி.வி., பிரிட்ஜ், வா‌ஷிங்மி‌ஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்கள் தண்ணீரில் மூழ்கின. வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலம் இறைத்து வெளியேற்றினர். சிலர் வீட்டில் இருந்த பொருட்களை பாதுகாப்பான இடங்களில் தூக்கி வைத்தனர். சிலர் கிடைத்ததை கையில் எடுத்துக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர். வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் குடியிருப்புகள் தீவு போல் காட்சியளித்தன.

போக்குவரத்து மாற்றம் 
தொடர் மழையின் காரணமாக நகர் முழுவதும் உள்ள வாய்க்கால், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்திராகாந்தி சிலை, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. 
தண்ணீரில் சென்ற போது பல இடங்களில் இரு சக்கர வாகனங்கள் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். சாலையில் மழைநீர் தேங்கி கிடந்ததால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கின.
புதுவை மரப்பாலம் அருகே அரசு பஸ் ஒன்று சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதனை கிரேன் மூலம் போக்குவரத்து ஊழியர்கள் மீட்டனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இந்திராகாந்தி சிலை, வெங்கட்டாநகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து ராட்சத எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். மழை காரணமாக நேற்று சாலையோர இறைச்சி கடைகள் நீரில் மூழ்கின. தெருவோர மீன், காய்கறி கடைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டது. பகல் 11 மணிக்கு மேல் மழையின்    தாக்கம்   குறையத் தொடங்கியது. மொத்தத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் 11 மணி வரை பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

காரைக்கால்
காரைக்காலில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை தூறியது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காமராஜர் சாலை, பாரதியார் சாலை, புளியங்கொட்டை சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவை நகரம், கிராமப்புறங்களில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள் புழுதி பறப்பதால் - வாகன ஓட்டிகள் அவதி
புறங்களில் தொடர் மழையால் குண்டும், குழியுமாக சாலைகள் மாறியுள்ளன. இதில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.