சேலம் பா.ஜனதா இளைஞரணி மாநாடு, தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்; மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
சேலத்தில் நடந்த பா.ஜனதா இளைஞரணி மாநாடு தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
மாநாடு
சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று மாலை பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. இதில், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
சேலம் இளைஞரணி மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 100 இளைஞர்களை தன்னிடம் கொடுத்தால் இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். அதுபோல், பிரதமர் மோடியின் வல்லமையை பார்த்து தமிழகத்தில் பா.ஜனதா கட்சியில் இளைஞர்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள்.
தாக்கத்தை ஏற்படுத்தும்
கந்தசஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்தவர்களின் கையில் வெற்றிவேல் ஏந்தியது பா.ஜனதா கட்சியின் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி. யாத்திரையை நடத்தக்கூடாது என்று போலீஸ் நிலையத்தில் எதிர்க்கட்சியினர் புகார் செய்தனர். ஆனால் யாத்திரை தொடங்கிய அதே திருத்தணியில் தை கிருத்திகை அன்று மு.க.ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டது. தமிழக அரசியலில் பா.ஜனதா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது இளைஞர்களின் சக்தியால் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞரணி மாநில தலைவர்
முன்னதாக மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மாநில இளைஞரணி தலைவர் வினோத் ப.செல்வம் பேசும்போது, ‘உலகில் மிகப்பெரிய கட்சி பா.ஜனதா கட்சி என்று கூறுவார்கள். ஆனால் இந்த மாநாட்டை பார்க்கும்போது இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக பா.ஜனதா திகழ்வதை காணமுடிகிறது.
சேலத்தில் நடத்தப்பட்ட இளைஞரணி மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் நாத்திகம் பேசியவர்களின் கையில் வெற்றிவேல் பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று இளைஞர்கள் அதிகளவில் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று அனைவரும் உறுதியேற்க வேண்டும்’ என்றார்.
இந்த மாநாட்டில், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட பார்வையாளர் கோபிநாத், மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பம்பாய் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் ரவி ராஜாராம், பிறமொழி மாவட்ட செயலாளர் விஷால்தீப், செவ்வாய்பேட்டை மண்டல செயலாளர் யுவராஜ், இளைஞரணி பொதுச்செயலாளர் பாலாஜி, செயலாளர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story