திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு


திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 22 Feb 2021 5:03 PM IST (Updated: 22 Feb 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா 6-ம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா 6-ம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.
மாசித்திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 7 மணி க்கு மேல கோவிலிலிருந்து சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாலையில் கீழ ரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதினம் மண்டபத்திற்கு வந்த சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் மேலக்கோவில் சென்றது. இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மாசித்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இன்று சிவப்பு சாத்தி
திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் உருகுசட்ட சேவை நடக்கிறது. பின்னர் 8.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.
தேரோட்டம்
8-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.
10-ம் திருநாள் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாள் (சனிக்கிழமை) இரவு சுவாமி அம்பாளுடன், தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story