திருவண்ணாமலையில் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையில் மது விற்றதால் பொதுமக்கள் சாலை மறியல்


திருவண்ணாமலையில் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையில் மது விற்றதால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:29 PM IST (Updated: 22 Feb 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
உயர் ரக மதுபானம்

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் வேட்டவலம் சாலை சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு உயர்ரக மதுபானம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதனை அதிகாரிகள் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகளை தொடங்கினர். இதனை கண்டித்து  வேட்டவலம் சாலை சந்திப்பு பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடை வராது என்று போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் ரகசியமாக திறந்து மது விற்பனையை தொடங்கியதாக தெரிகிறது. இந்த கடையின் அருகில் கோவில், குடியிருப்பு பகுதிகள் போன்றவை உள்ளன. 

மீண்டும் சாலை மறியல்

எனவே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேட்டவலம் சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக கூறினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் அவர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்றும், அதனையும் மீறி தொடர்ந்து செயல்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் இனி இங்கு டாஸ்மாக் கடை செயல்பாடாது என்று கூறியதுடன், அந்த கடையை மூடினர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
=============

Next Story