காட்டெருமை தாக்கி டேன்டீ மேற்பார்வையாளர் படுகாயம்


காட்டெருமை தாக்கி டேன்டீ மேற்பார்வையாளர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Feb 2021 1:35 PM GMT (Updated: 22 Feb 2021 1:38 PM GMT)

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி டேன்டீ மேற்பார்வையாளர் படுகாயம் அடைந்தார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் பக்காசூரன் மலை உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) செயல்பட்டு வருகிறது. 

இதில் மேற்பார்வையாளராக செல்வராஜ்(வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி, அதே டேன்டீ நிர்வாகத்துக்கு கீழ் உள்ள தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளியாக உள்ளார்.

இந்த நிலையில் அந்த டேன்டீ தோட்டத்தில் 6 தொழிலாளர்கள் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த பணியை செல்வராஜ் பார்வையிட்டு கொண்டு இருந்தார். 

காட்டெருமை தாக்கியது 

அப்போது அந்த தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்துக்கு அவர் நடந்து சென்றார். அப்போது அங்கு காட்டெருமை ஒன்று வந்தது. இதை கண்ட அவர், தப்பி ஓட முயன்றார். 

எனினும் துரத்தி வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதில் மார்பு, கை, கால் ஆகிய இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் காட்டெருமை அங்கிருந்து சென்றது.

பீதி

இதற்கிடையில் செல்வராஜின் சத்தம் கேட்டு அங்கு வந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குன்னூர் வனச்சரகர் சசிகுமார், டேன்டீ வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று, விசாரணை நடத்தினர்.

டேன்டீ மேற்பார்வையாளரை காட்டெருமை தாக்கிய சம்பவம் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story