தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்கதமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் தேனி ஆர்.சி. பள்ளி முன்பு இருந்து பங்களாமேடு வரை மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, போடி ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆண்டிப்பட்டி
இதேபோல் ஆண்டிப்பட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமை தாங்கினார். தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story