தேனி: கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பணிகளில் தனிக்கவனம் செலுத்தப்படும் -புதிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி


தேனி: கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பணிகளில் தனிக்கவனம் செலுத்தப்படும் -புதிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி
x
தினத்தந்தி 22 Feb 2021 8:06 PM IST (Updated: 22 Feb 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பணிகளில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய கலெக்டராக பதவி ஏற்ற கிருஷ்ணனுண்ணி கூறினார்.

தேனி:

புதிய கலெக்டர்

தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பல்லவி பல்தேவ், சென்னை நிலம் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதில் தமிழக நிதித்துறை இணை செயலாளராக இருந்த கிருஷ்ணனுண்ணி தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, தேனி மாவட்டத்தின் 16-வது கலெக்டராக கிருஷ்ணனுண்ணி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரை அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். நான் 2012-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்டத்தில் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியாற்றினேன். 

2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சப்-கலெக்டராக பணியாற்றினேன். 

2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழக நிதித்துறை துணைச் செயலாளராக பணியாற்றினேன். 

அதன்பிறகு நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றினேன். தற்போது தேனி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றுள்ளேன்.

தனிக்கவனம்
அரசின் அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். 

எல்லா துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கப்படும். கல்வி, சுகாதாரம், இளைஞர்நலன், திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தப்படும். 

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவுரைகள்படி தேர்தல் நடத்தப்படும். நீர்மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்றவை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story