தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள தாய்ப்பால் வங்கியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள தாய்ப்பால் வங்கியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை திறந்து வைத்தார்.
தாய்ப்பால் வங்கி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்காக ரூ.25 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கியில் 200 லிட்டர் தாய்ப்பாலை, 6 மாதங்களுக்கு பாதுகாப்பாக வைக்க முடியும். இந்த தாய்ப்பால் வங்கி திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தாய்ப்பால் வங்கியை திறந்து வைத்தார்.
விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆறுமுக நயினார் ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்ச்சாலை
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை சாலைக்கு தமிழ்ச்சாலை என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தலா ரூ.250 வீதம் 500 குழந்தைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் பணம் செலுத்தி, சேமிப்பு கணக்கை தொடங்கினார். இந்த குழந்தைகளுக்கு சேமிப்பு திட்ட புத்தகத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி தலைமை தபால் நிலைய உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்தா சிந்துதேவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன், சீத்தாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட புத்தகங்களை வழங்கி பேசினார். அவர் கூறும்போது, ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதாமாதம் பெற்றோர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமிக்கலாம். உதாரணத்திற்கு மாதம் ரூ.1000 வீதம் 15 ஆண்டுகள் தொடர்ந்து சேமிப்பு செய்து, பின்னர் 6 ஆண்டுகள் பணம் கட்ட வேண்டியதில்லை. குழந்தைக்கு 21 வயது ஆகும் போது அவருடைய திருமணத்திற்கு பணம் பெற இந்த திட்டம் உதவியாக இருக்கும், ரூ.1000 வீதம் பணம் கட்டியவர்களுக்கு இறுதியில் ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்து 200 வரை கிடைக்கும். இந்தத் திட்டத்தில் பணம் கட்டுபவர்கள் குழந்தையின் மேற்படிப்பிற்கு சேமிப்பில் உள்ள பணத்தில் ஒரு பகுதியை பெறவும் வசதி உள்ளது’ என்றார்.
அம்மா நகரும் ரேஷன்கடை
இதனை தொடர்ந்து கோவில்பட்டி நடராஜபுரம் பசும்பொன் நகரில் அம்மா நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், கூட்டுறவு துணை பதிவாளர் சந்திரா, தாலுகா வினியோக அதிகாரி சுப்புலட்சுமி, தாசில்தார் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
ரூ.181 கோடி
தமிழகத்தில் விவசாயிகளின் ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடனை முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்து சரித்திரம் படைத்து உள்ளார். இது ஏமாற்று வேலை என்று எதிர்க்கட்சியினர் கூறினர். ஆனால் முதல்-அமைச்சர் ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட்டார். இன்று (அதாவது நேற்று) கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளை முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ரூ.181 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்பினர் கோவில்பட்டி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
பெட்ரோல் விலை
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போதுதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதே போன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை தமிழக அரசு ஆதரிக்கவில்லை. அதனை குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்து உள்ளார். மத்திய அரசு ஒரு முடிவு எடுக்கும் போது, அதற்கு ஆதரவோ, எதிர்ப்போ, அழுத்தமோ கொடுக்க வேண்டியதை முதல்-அமைச்சர் சரியாக செய்து வருகிறார். பெட்ரோல், டீசல் விலையிலும் தேவையான அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்கும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பாக விசாரணை கமிஷன் உள்ளது. இதனால் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது என்றும், சட்டரீதியாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story