திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் தமிழச்்செல்வி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்குவேன் என்று அறிவித்தார். ஆனால் தற்போது வரை அரசு ஊழியர்களாக அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மாற்றப்படவில்லை. எனவே ஜெயலலிதா அறிவித்தபடி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை உடனடியாக அரசு ஊழியர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசிடம் இருந்து உரிய அறிவிப்பு வரும்வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story