மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய ‘பிளாஸ்டிக் டிரம்'மால் பரபரப்பு


மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய ‘பிளாஸ்டிக் டிரம்மால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 4:16 PM GMT (Updated: 22 Feb 2021 4:16 PM GMT)

மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய ‘பிளாஸ்டிக் டிரம்'மால் பரபரப்பு ஏற்பட்டது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே நேற்று கடலில் இருந்து நீள நிறத்தில் 4 அடி நீளத்தில், 300 கிலோ எடை அளவில் ‘பிளாஸ்டிக் டிரம்' ஒன்று கரை ஒதுங்கியது. மீன்பிடி வலை பின்னும் பணியில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டிரம்மின் மூடியை திறந்து பார்த்தனர். கப்பலில் இருந்து வெளியேறும் கழிவாக இருக்குமா? அல்லது ரசாயன பொருளாக இருக்குமா? என்ற சந்தேகம் அடைந்து டிரம்மில் இருந்த மாதிரியை எடுத்து சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவு

பரிசோதனை முடிவு வந்த பிறகே கப்பலில் இருந்து வெளியேறும் கழிவு பொருளா? அல்லது ரசாயன பொருளா? என்பது தெரிய வரும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொக்கிலமேடு கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உருளையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால் பிளாஸ்டிக் டிரம் கரை ஒதுங்கிய சம்பவம் மாமல்லபுரம் மீனவ கடற்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அந்த டிரம்மை பாதுகாத்து வருகின்றனர்.

Next Story