நெற்பயிர்களுடன் வந்து திண்டுக்கல் கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயிகள்
பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிவாரணம் கேட்டு நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிவாரணம் கேட்டு நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் பழனி தாலுகா ஆண்டிப்பட்டி ஊராட்சி குதிரையாறு இடதுபுற நேரடி பாசனம் பெறும் தணக்கலங்காடு, ஆலமரத்து பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதற்கான நிவாரணம் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த போது, நாங்கள் பயன்படுத்தும் நிலத்துக்கு பட்டா இல்லை என்றும், அதனால் நிவாரணம் வழங்க முடியாது என்றும் கூறுகின்றனர். நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் அந்த நிலத்தில் தான் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் பட்டா வழங்கவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கொரோனா ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஊர்களில் மட்டுமே அரசு விதிமுறைப்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான காளைகள் வாடிவாசலுக்குள் நுழையமாலேயே திரும்பி செல்லும் நிலை உள்ளது. ஆனால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் திண்டுக்கல்லிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story