புதிதாக 331 வாக்குச்சாவடிகள் அமைப்பு


புதிதாக 331 வாக்குச்சாவடிகள் அமைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 5:35 PM GMT (Updated: 22 Feb 2021 5:35 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 331 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 331 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
அனைத்துக்கட்சி கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிப்பது தொடர்பான அனைத்துகட்சி கூட்டம் மாவட்டகலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் அதிகாரிகளும் அ.தி.மு.க. சார்பில் அர்ச்சுனன், வி.ஆர்.பாண்டி, ரமேஷ், தி.மு.க. மாவட்ட துைண செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து மற்றும் அழகர்சாமி மதன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 பா.ஜ.க. நகர் தலைவர் தனசேகரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுசெயலாளர் மயில்சாமி, மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் கோபால், நகர் செயலாளர் கண்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் பழனிச்சாமி, விஜயகுமார், கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி
கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பேசியதாவது:-
இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள வாணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள கோட்டையூர் என்ற கிராமத்திற்கு சென்று வாக்களிக்கின்றனர். எனவே வாணி மற்றும் ஏனாதி ஆகிய 2 கிராமத்திற்கும் சேர்த்து வாணி கிராமத்தில் தனியாக ஒரு வாக்குச் சாவடி அமைக்க வேண்டும். இதே போல திருப்புவனத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே அதை சீரமைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை தனி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி தொகுதியில் 345 வாக்குசாவடிகளும் திருப்பத்தூர் தொகுதியில் 334 வாக்குச்சாவடிகளும் சிவகங்கை தொகுதியில் 348 வாக்குச்சவடிகளும் மானாமதுரை தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும் சேர்த்து மொத்தம் 1,348 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள இடங்களில் வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. 
நடவடிக்கை
அதன் அடிப்படையில் காரைக்குடி தொகுதியில் 98 வாக்கு சாவடிகளும் திருப்பத்தூர் தொகுதியில் 76 வாக்குச்சாவடிகளும் சிவகங்கை தொகுதியில் 79 வாக்குசாவடிகளும் மானாமதுரை தொகுதியில் 77 வாக்குச்சாவடிகள் உள்பட 331 வாக்குசாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே வாக்குச்சாவடி உள்ள வளாகத்திற்கு உள்ளேயே உள்ள கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடி மட்டும் வேறு இடத்தில் அமைந்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் சேர்த்து 1,679 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மேலும் திருப்புவனத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  வாணி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story