குடிமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் சின்ன வெங்காயம்
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.
வெங்காய சாகுபடி
குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு பட்டறை அமைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்கு பிறகு பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டறைகள்
சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு விதை, நடவு, களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது.
சின்னவெங்காயம் 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்னவெங்காயம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவம் தவறிய மழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டதால் தற்போது விலை உயர்ந்து காணப்படுகிறது.
அறுவடை
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இருந்த போதிலும் இந்த ஆண்டு வெளி மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story