தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை மாற்றத்தை ஏற்படுத்தும்


தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை மாற்றத்தை ஏற்படுத்தும்
x
தினத்தந்தி 22 Feb 2021 11:35 PM IST (Updated: 22 Feb 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி வருகை தமிழ் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உடுமலையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

உடுமலை:
பிரதமர் மோடி வருகை தமிழ் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உடுமலையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிர்வாகிகள் சந்திப்பு 
உடுமலை சட்டமன்ற தொகுதி பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் உடுமலை சத்திரம் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பா.ஜ.க. உடுமலை சட்டமன்றத்தொகுதி அமைப்பாளர் எஸ்.எஸ்.குட்டியப்பன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் ஆர்.விஜயராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
மாற்றம் ஏற்படும்
பிரதமர் மோடி கோவைக்கு 25-ந் தேதி வருகிறார். பிரதமர் வருகைக்காக பா.ஜனதா கட்சியினர் இந்த மண்டலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பதை பார்வையிட வந்தேன். பிரதமர் கோவைக்கு வருகைதர உள்ளதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். பிரதமர் மோடி வருகை தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவரது வருகை எதிர்காலத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் அளவிற்கு இருக்கும் என்ற கருத்து, பொதுமக்கள் அவர் மீது கொண்டுள்ள பாசத்தை காட்டுவதாக உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இப்போதுள்ள பலத்தைவிட அதிக பலத்துடன் ஆட்சி அமையும். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை இயக்குகிறது என்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். 2019-ம் ஆண்டு தேர்தலின்போது, ராகுல்காந்தி பிரதமராக வரமுடியும் என்று காங்கிரஸ் கட்சியே சொல்லாத போது ராகுல்காந்தி பிரதமராவார் என்று இவர் சொல்லிவந்தார். 
விவசாயிகள் போராட்டம்
காங்கிரஸ் கட்சியே முன்வைக்காததை மு.க.ஸ்டாலின் கூறிவந்தார். காங்கிரஸ் முடிந்து போன ஒரு சரித்திரம். இனி காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் ஆட்சிக்கு வர முடியும் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அதை மறந்து விடவேண்டும். விவசாயிகளின் நலன் கருதிதான் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் நலனை பா.ஜனதா அரசு புறந்தள்ளாது. விவசாயிகளின் போராட்டம் தூண்டிவிடப்பட்ட போராட்டம். காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில்தான் விவசாயிகளின் போராட்டம் நடந்தது என்பது பின்பு தெரியவரும்.
முதல்-அமைச்சராக வருவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். இதுபோன்று அவர் மேயர் ஆவதற்கு முன்பிருந்தே சொல்லிவந்ததுதான். அதுபோன்று இப்போது இதுவும் கடந்து போகும்.
இவ்வாறு  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 
பேட்டியின்போது பா.ஜனதா நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோன்று மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் உடுமலை அருகே எஸ்.வி.புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

Next Story