மனவளர்ச்சி குன்றிய மகளுடன் பெண் தர்ணா
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
ிழுப்புரம்,
விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சத்யா (வயது 61) என்பவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகளான சரண்யாவுடன் (30) நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று சத்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அப்போது அவர், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கணவரால் கைவிடப்பட்டவர். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது வீட்டை இடித்து விட்டனர். எங்களுக்கு சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டும் அளவிற்கு வசதியில்லை. இதனால் எங்கள் ஊரில் உள்ள ஒரு கோவிலில் வசித்து வருகிறோம். நான் வளர்த்து வந்த 2 ஆடுகளையும் யாரோ திருடிச்சென்று விட்டனர். எங்கள் வீட்டை இடித்ததற்காக கொடுத்த பணத்தை வைத்து என்னால் இடம் வாங்க முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு தனியாக இடத்தை ஒதுக்கித்தந்தால் அங்கு குடிசை வீடு கட்டி வாழ்வோம். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் அண்ணாதுரை, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.
Related Tags :
Next Story