கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பாடாலூர்:
கடன்தொகை வழங்கப்படவில்லை
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் போன்றவற்றில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ளவை தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாய கடன்களுக்காக விண்ணப்பித்து, அதற்கான உத்தரவும், உரமும் பெறப்பட்டுவிட்ட நிலையில், கடன் வழங்க நிதி இல்லை என்று கூறி கடனுக்கான பணத்தை பட்டுவாடா செய்யாமல் அதிகாரிகள் காலம் கடத்தி வந்தனர்.
மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி, அவர்களுக்கு பொருந்தாது என்றும், பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் என்றும் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கடன் தள்ளுபடியில் உள்ள முரண்பாடுகளை களைந்து, தங்களுக்கு கடன் தொகையை வழங்குவதோடு, கடன் தள்ளுபடி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முற்றுகை
இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், அதே ஊரில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கும் கடன் தள்ளுபடி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், விரைவாக கடன் தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story