குமரியில் 63 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 63 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்
நாகர்கோவில்,:
குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 63 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
5 நவீன கேமராக்கள்
குமரி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோந்து வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நேற்று காலை நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு அந்த வாகனத்தை இயக்கி வைத்து, வாகனத்தில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்வதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காகவும், குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் புதிய ரோந்து வாகனம் இன்று (அதாவது நேற்று) முதல் செயல்பட உள்ளது. இந்த ரோந்து வாகனத்தில் 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த வாகனமானது முக்கிய விழாக்களின் பாதுகாப்பு பணிக்காகவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தப்படும்.
விழிப்புணர்வு
இந்த வாகனத்தில் சுழன்று படம்பிடிக்கும் நவீன கேமராக்கள் உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்ய முடியும். மேலும் உயர் அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் இருந்தவாறு சம்பவ பகுதியை கண்காணித்து உடனுக்குடன் சூழ்நிலைக்கேற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.
இந்த வாகனம் கண்காணிப்பு வாகனமாக மட்டுமல்லாமல், ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனமாகவும் செயல்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள அகன்ற திரையில் குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள், போட்டோக்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.
39 வழிப்பாதைகள்
மாலை வேளைகளில் முக்கியமான பகுதிகளில் இந்த வாகனத்தை நிறுத்தி கண்காணிப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் கேரளா மற்றும் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. குமரி மாவட்ட எல்லையில் இருந்து கேரளாவுக்குச் செல்ல தற்போது 39 வழிப்பாதைகள் உள்ளன. இந்த 39 வழிப்பாதைகளிலும் இரு மாநில போலீசார் இணைந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
63 வாக்குச்சாவடிகள்
குமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 63 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மாறுபடலாம். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு எத்தனை கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினரை வரவழைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி, இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமாரி, சாய் லட்சுமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story