கருத்து கேட்பு கூட்டத்தை சட்டப்படி நடத்தக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
கரூரில் கருத்து கேட்பு கூட்டத்தை சட்டப்படி நடத்தக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் சிலர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி (கட்டளை) முதல் தென் வெள்ளாறு நதி வரை வெள்ளநீர் கால்வாயை உருவாக்குவதற்கான திட்டத்தின் இ.ஐ.ஏ. மீதான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் பல்வேறு விதமான சட்டவிரோத நடைமுறைகள் உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் கருத்து கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து நடத்த வேண்டும். கரூர் மாவட்ட கலெக்டர் இந்த திட்டத்தின் இஐஏ மீதான கருத்து கேட்பு கூட்டத்தை முறையாக ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் செயல்படுத்திட கருத்து கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து, சட்டப்படி அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில், அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி ஜனநாயக பூர்வமாய் நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழில் பெயர் பலகைகள்
நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் கட்டாயமாக முதலில் தமிழிலும், அடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் அமைக்க வேண்டும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், நடைமுறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிக்கவும் தமிழக அரசு கொண்டு வந்த அரசாணைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் பெயர் பலகை விதிமுறைகளை மாவட்டத்தில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்தும், அப்படி கடைப்பிடிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மேல் நடவடிக்கை எடுத்து தமிழை பெயர் பலகைகளில் மீட்ெடடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
293 மனுக்கள்
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 293 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story