கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:57 AM IST (Updated: 23 Feb 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

அரசு வழங்கிய பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர், 
அரசு வழங்கிய பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
கண்களில் கருப்பு துணி
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த 57 பேருக்கு இடுவாய் கிராமத்தில் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு நிலத்தை அவரவர் பெயருக்கு அளவீடு செய்து கொடுக்காமல் உள்ளது. வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மணி, மாநில துணை செயலாளர் விடுதலை செல்வன் ஆகியோர் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றனர். அதற்குள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நேரடியாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்ததால் மனுவை கொடுத்து விட்டு சென்றனர்.
ஆக்கிரமிப்பு
முதலிபாளையம் ஊராட்சியை சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் வசதியில்லை. அதை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், மாநகராட்சியின் 58-வது வார்டு இடுவம்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் இடுவம்பாளையம் சாந்திநகரை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வீடுகளுக்கு அரசு கேபிள் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 1 வருடத்துக்கு மேலாகியும் வழங்காமல் உள்ளனர். எங்களுக்கு கேபிள் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கல் குவாரிகள்
பல்லடம் அருகே காரணம்பேட்டை, கோடங்கிப்பாளையம், பெருமாகவுண்டன்பாளையம், இச்சிப்பட்டி, கொத்துமுட்டிபாளையம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இங்கு கல்குவாரிகள், கிரஷர்கள், தார் பிளாண்ட் இயங்கி வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து முறையிட்டோம். 
இந்தநிலையில் குவாரிகளுக்கு புதிதாக உரிமம் வழங்குவதற்காக கருத்து கேட்பு கூட்டம் கடந்த 17-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட மக்களை வைத்து கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். பாதிக்கப்படும் எங்களிடம் முறையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Next Story