திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 23 Feb 2021 2:04 AM IST (Updated: 23 Feb 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் 5 டன் பூக்கள் குவிந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை
5 டன் பூக்கள் குவிந்தன
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் பூத்தட்டுகளை எடுத்து வைத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பூக்களை கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு சாற்றப்பட்டன. இதில் மூலஸ்தானம் கருவறை முழுவதும் நிரம்பி, அதற்கு அடுத்த அறையும் நிரம்பி பக்தர்கள் வழிபாடு நடத்தும் இடம் அருகே வரை பூக்கள் குவிந்தன. மொத்தம் 5 டன் எடை அளவில் பூக்கள் இருக்கும் என கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
பக்தர்கள் தரிசனம்
இந்த நிலையில் அம்மனுக்கு பூக்கள் அனைத்தும் சாற்றப்பட்ட பின் நேற்று காலை கோவில் திறக்கப்பட்டன. இதில் மலை போல குவிந்து கிடந்த பூக்களுக்கு மத்தியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனின் திருமுகம் மட்டுமே தெரிந்தது. 
அம்மனை பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் மனமுருகி வேண்டினர். முன்னதாக கோவிலில் அரசு தரப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் வழிபாடு நடத்திய பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அம்மனுக்கு சாற்றப்பட்ட பூக்களை பக்தர்களுக்கு கோவில் குருக்கள் வினியோகித்தனர். வேண்டும் வரம் அளிக்கும் அம்மனை இந்த சிறப்பு அலங்காரத்தில் பார்த்து கண்குளிர்ந்தனர்.
மாசித்திருவிழா
கோவிலில் மாசித்திருவிழா வருகிற 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் பாரதிராஜா, உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story