தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 2:13 AM IST (Updated: 23 Feb 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கே.என்.நேரு பேசியதாவது:-
வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி உத்தரவால் அ.தி.மு.க.வினர் மட்டுமே பயனடைந்துள்ளனர் என்பது எனது குற்றச்சாட்டு. ஏனென்றால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்களாக அ.தி.மு.க.வினரே உள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்களில் கடன் பெற்று கொண்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதனை கண்டுபிடிப்போம்.
கடந்த 10 ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தற்போது வேளாண் கடன், கல்வி கடன் தள்ளுபடி என்று கூறுகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு சொன்னபோது, எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாய கடன்களை ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்த பின்னரே, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளார். ஆகவே, தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும், இந்த ஆட்சியை இயக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.  அடுத்த கட்டமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாபெரும் வெற்றி
 ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பேசினாலும் முதல்-அமைச்சர் ஆக முடியாது என எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். எழுதி வைத்து கொள்ளுங்கள். வருகிற மே மாதம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்பார்.
 நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது போல் மாபெரும் வெற்றியை தி.மு.க. கூட்டணி பெரும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டதாக முதல்-அமைச்சர் கூறி வருகிறார். ஆனால், உபரி நீர் என்ற பெயரில் மேட்டூரில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 60, 68 ஏரிகளை நிரப்புவதற்காக ரூ.380 கோடியில் தனிவாய்க்காலை எடப்பாடி பழனிசாமி வெட்டிக்கொண்டு வருகிறார். இத்திட்டம் சேலத்தை வளப்படுத்தவே உதவும். இத்திட்டத்தால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று காலை சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

Next Story