நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால்  பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 2:18 AM IST (Updated: 23 Feb 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. 
அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாநகராட்சி. சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, பவானி நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பவானிசாகர் அணை பூர்த்தி செய்கிறது. 
வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 512 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 444 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 95.89 அடியாக இருந்தது. 
நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 96.24 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 598 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் 9 மணி அளவில் அது வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. 
தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story